வெள்ளி, 25 மே, 2012

வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு!






தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீ தரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, (22.5.2012) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, தாயகத்தில் சந்தித்தனர்.
யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

“தாய்த்தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும் என்றும், ஈழத்தின் விடியல் தமிழ்நாட்டின் கைகளில்தான் இருக்கின்றது” என்றும், ஸ்ரீதரன் நம்பிக்கையோடு கூறினார்.
வைகோ கூறியதாவது:

சுதந்திரத் தமிழ் ஈழ தேசம்தான் நமது இலக்கு. ஆனால், சிங்கள இனவாத அரசு, ஆறாவது சட்டத் திருத்தத்தைக் கொடுவாளாகப் பயன்படுத்தி, இலங்கைத் தீவில் சுதந்திர ஈழக் குரல் எழுப்பும் அரசியல் கட்சிகளை நசுக்கவும், நாசமாக்கவும் திட்டமிட்டு உள்ளதால், தீவில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் வெளிப்படையாகத் தனி ஈழக் குரல் கொடுக்க முடியாத தற்போதைய நிலையை, நன்கு அறிவோம்.

ஈழத்தமிழர்கள் பிரிவினை கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தையே மீண்டும் கேட்கின்றனர். இறையாண்மை உள்ள சுதந்திர தேசமாக அரசோச்சி வாழ்ந்த தங்கள் தாயகம், சிங்களவரின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடப்பதால், அந்த விலங்குகளை உடைத்து, அந்நியர் ஆக்கிரமிப்பை அகற்றி, இழந்த சுதந்திரத்தை மீண்டும் அடைவதற்கான, ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை, அனைத்து உலக நாடுகள் நிராகரிக்கவோ, உதாசீனம் செய்யவோ முடியாது.
தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களரை வெளியேற்றவும், சுதந்திர ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்தவும், அதில் அனைத்து உலக நாடுகளில் ஆங்காங்கு வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுமான கோரிக்கையை, அனைத்து உலக மக்கள் நீதியும் நியாயமுமாகக் கருதி ஏற்கவே செய்வார்கள். அதுவே ஈழத்தமிழர்களின் இலக்கு; தாய்த் தமிழகத்தின் இலக்கு; தரணி வாழ் தமிழர்களின் இலக்கு. அந்த இலக்கினை உறுதியாக அடைவோம். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்ந்திடச் செய்வோம்” என்று வைகோ கூறினார்.

‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க
22.05.2012

வியாழன், 17 மே, 2012

மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !



தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக நாதம்ஒலிபரப்பென, சிற்றலையூடாக (Shortwave) இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது.

தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பரப்பெங்கும் இது ஒலிக்கவுள்ளது.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை, இதன் 1 மணி நேர முதற் சிறப்பு ஒலிபரப்பு அமையவுள்ளது.

சிறிலங்காவிக் தமிழின அழிப்பின், கொடிய போரின் வலிகளைச் சுமந்து நிற்கும் தாயக மக்களுக்கு, ஒத்தடமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் நோக்காக கொண்டு இதன் ஒலிபரப்பு அமையுமென, நா.த.அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்நாடு, மலேசியா ,சிங்கப்பூர் என உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் உணர்வுப்பாலமாகவும் இது அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை முடக்க, பலவழிகளிலும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு, இலங்கையின் வான்பரப்பூடாக தமிழீழ மக்களை எட்டவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் வானலை ஒலிபரப்பு , கடும் சீற்றத்தினைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

திங்கள், 14 மே, 2012

லண்டன் வரவுள்ள மகிந்த ராஜபக்சவை விரட்டத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள்!



இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும் ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

இதன் முதற் கட்டமாக மகிந்தவின் லண்டன் விஜயத்தை தடுத்து நிறுத்தக்கோரும் தபால் அட்டைகளை பிரித்தானிய மகாராணிக்கு அனுப்பும் போராட்டத்தினை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். இதனை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையும் மீறி மகிந்த லண்டன் வரும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த போது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர்.

அத்துடன் இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த, அவரது பாதுகாப்புப் பிரிவு கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர்க்குற்ற வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து இலங்கை ஜனாதிபதியின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் நீக்கம் செய்திருந்தது.

அத்தோடு பிரித்தானியாவில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் முன்பாகவும் திடீரென நடாத்திய முற்றுகைப் போராட்டத்தால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச மாற்று வழியூடாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.

அதனையும் எப்படியோ அறிந்த தமிழ் மக்கள் அங்கும் சென்று முற்றுகைப் போராட்டம் நடாத்தியதால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச நிலைமைகள் சிக்கலடைந்ததால் உடனடியாகவே பிரித்தானிய காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்போடு வெளியேறி அன்று இரவே கொழும்பு சென்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 13 மே, 2012

விடுதலையான தமிழ் பெண் அரசியல் கைதியை பொறுப்பேற்க யாருமின்றி மீண்டும் சிறையில்..!



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது.

2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வியாழன், 10 மே, 2012





திங்கள், 7 மே, 2012

இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம்! ஆனால் வழங்கமாட்டோம் என்பதே ஜனாதிபதியின் கொள்கை



தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவோமென இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உறுதியளிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுபுறம் சிங்கள ““தேசாபிமான அமைப்புக்களை தூண்டிவிட்டு உரிமைகள் வழங்குவதை தடுக்கும் சதித் திட்டத்தையும் மேற்கொள்கிறார் என நவசமமாஜக் கட்சி குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக நவசமமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ஐ.தே. கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த கூட்டு எதிர்க்கட்சிகளின் மே தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அரசாங்கத் தரப்பு, படைத் தரப்பு என யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்துவதை தடுப்பதற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.

இவையனைத்தையும் தகர்த்தெறிந்து மே தினம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 15000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னணியில் இந்தியா இருந்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இம் மே தினத்தினால் அரசாங்கத்தின் மத்தியில் தற்போது அச்சம் குடிகொண்டுள்ளது.

அத்தோடு இந் நிலைமையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலுடன் உரிமைகளை வழங்க வேண்டுமென்ற இந்தியாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் அழுத்தங்கள் ஜனாதிபதி மஹிந்த மீது அதிகரித்து வருகின்றன.

இதனால் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு உருவாகியுள்ளது.

தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்கி உரிமைகள் வழங்குவதை ஜனாதிபதி ஒரு போதும் விரும்பியதில்லை. இதற்கு எதிரான கொள்கையையே கொண்டுள்ளார்.

ஆனால் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக உரிமைகளை வழங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வழங்குவோம். ஆனால் வழங்கமாட்டோம் என்பதே ஜனாதிபதியின் கொள்கையாகும்.

இதனால் நாட்டிலுள்ள சிஹல உறுமய, ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிங்கள பேரினவாதிகளின் தேசாபிமான அமைப்புக்களை தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு எதிராக தூண்டிவிடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ் எதிர்ப்பை பயன்படுத்தி தமிழ் மக்களை அடிமைகளாக வாழ வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.

அதேவேளை பிரபாகரனை கொலை செய்து தமிழ் மக்களை அழித்து பலத்தை தகர்த்தெறிந்த இந்தியா இன்று தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலையும் சுயாட்சியையும் பெற்றுக் கொடுப்பதற்கு பலமாக முயற்சிக்கின்றுது.

ஏனென்றால் தமிழர்களுக்கு நாங்கள் தான் உரிமைகளை பெற்றுக் கொடுத்தோம் என வரலாற்றில் பதிவதற்கும் தமிழர்களை வடபகுதியை இந்தியாவின் அடிமைத்தனத்திற்கு கீழ் மட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதற்குமே இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வேலை தருவதாகக் கூறி பெண்களை தவறான வழியில் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது: சீ.யோகேஸ்வரன்




மட்டக்களப்பில் பெண்களை ஆடைத் தொழிற்சாலையில் வேலை தருவதாக கூறி, அழைத்து செல்பவர்கள் தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சமூக நலன்புரி அமைப்பு நடாத்திய, லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் மூலமாக ஆடைத் தொழிலகம் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆரையம்பதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற இவ்விழாவில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்பட்ட கொடிய யுத்தம், சுனாமி போன்றவற்றால் தமது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப முடியாத நிலையிலும் சவுதி போன்ற கீழைத்தேய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்ணாகவும், எமது மாவட்டம் தவிர்ந்த வேறு மாவட்டங்களுக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கும் செல்கின்றனர்.

அங்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு, கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்றி ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை தருவதாக சிலர் வறிய பிரதேசங்களில் இருந்து சிலரை அழைத்துச் சென்று எங்களது மகளீரை தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் சில செயற்பாடுகளும் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

இச்செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இவ்விடயமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையில் உள்ளோம். இந்த வகையில் இங்கு ஒரு ஆடைத் தொழிலகம் ஆரம்பிக்கப்படுவதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

லண்டனில் இருந்த வருகை தந்த சகோதரர் கோபாலகிருஸ்ணன், தமது கற்பக விநாயகர் ஆலயத்தின் ஊடாக இப்பணியை புரிய வந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இன்று எமது மக்களின் நலன்கருதி லண்டனில் இருந்து கோபாலகிருஸ்ணன் நேரடியாக வருகை தந்து பல சேவைகைளை எமது மண்ணில் நடாத்துகின்றார்.

அகிலன் பெண் பிள்ளைகள் பராமரிப்பகம், கற்பகா பப்பட தொழிற்சாலை, அகிலன் கணனி பயிற்சி நிலையம், தற்போது ஆடைத் தொழிலகம் போன்றவையும், பல்கலைக் கழக மாணவர்களுக்கான நிதி கொடுப்பனவையும் எங்களது சமூக நலன்புரி அமைப்பு ஊடாக நடாத்துகின்றார்.

எமது மண்ணில் வடமாகாண மக்களை பிழையாக எடுத்துக்காட்டி பிரதேச வாதம் கூறி, சிலர் அரசியல் இலாபம் தேடும் இவ்வேளை, வடமாகாணத்தை சேர்ந்த எம் உறவுகளின் உதவி எம் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இன்று கோபாலகிருஸ்ணன் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்திலும், தமது பணியை முன்னெடுத்து செல்கின்றார். உண்மையிலே எமது மக்கள் எங்கு துன்பப்படுகின்றார்களோ அங்கெல்லாம் அவரின் பணி செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.